லசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்பதே நாம் அவருக்கு செய்யக்கூடிய சிறந்த பிரதி உபகாரம் ஆகும் என இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரட்ண தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டிக்கு முன்னரான கொழும்பு ஆர். பிரேமதாச விளையட்டரங்கின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திமுத் கருணாரட்ண மேலும் கூறுகையில்,

“லசித் மாலிங்க ஒரு ஜாம்பவான் ஆவார். கடந்த 15 ஆண்டு காலமாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் பல சேவைகளை செய்துள்ளார். அவர் விக்கெட் வீழ்த்தும் வீரராவார். அவரின் பந்துவீச்சுத் திறமையால் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியுடன் சர்வதேச ஒருநாள் அரங்கில் ஓய்வு பெறும் அவரை நாம் இழக்கிறோம். 

அவரைப் போன்றொரு ‘விக்கெட் எடுக்கும்’  வீரரை இழப்பது பெரிய பாதிப்பாகும். நான், அவரிடம் (லசித் மாலிங்க) 3 போட்டிகளிலும் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றிருக்கலாமே என்று கேட்டதற்கு, நான் முதலாவது போட்டியிலேயே ஓய்வு பெற்றால் தான், இளம் பந்துவீச்சாளர் ஒருவருக்கு விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும். அப்போதுதான் அவர்களது தன்னதம்பிக்கை அதிகரிக்கப்படும். அதனால், அவர்கள் தங்களது பந்துவீச்சுத்  திறமைகளை வெளிக்காட்டி அணிக்குத் தேவையானதை புரிவார்கள் என கூறியிருந்தார்.

ஆகவே, பங்களாதேஷ் அணியுடனான  தொடரின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியை வெல்வதற்கு கடுமையாக முயற்சிப்போம். லசித் மாலிங்கவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்பதே நாம் அவருக்கு செய்யக்கூடிய மிகச் சிறந்த பிரதி உபகாரம் ஆகும். போட்டி நிறைவடைந்ததன் பின்னர், உடை மாற்றும் அறையில் அவருக்கு பிரியாவிடை வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதற்கு முன்னதாக நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் லசித் மாலிங்கவுக்கு பிரியாவிடை வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”  என்றார்.

முதலாவது போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் ஏதும் மாற்றங்களை செய்துள்ளீர்களா என கேட்டதற்கு, “இல்லை. அப்படியொரு பெரிய மாற்றமும் இருக்காது. அநேகமாக உலகக் கிண்ணத்தில் விளையாடிய அதே அணியே இப்போட்டியில் விளையாடும். எமது துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாட்ட நுணுக்கங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை பெற்றுக்கொள்ளுதல் அவசிமாகும் என்றார்.

 ( எம்.எம்.சில்வெஸ்டர்)