யுத்தத்தில் சிக்குண்டு தமிழ் மக்கள் வேதனையில் தவித்தபோது மகிந்த அரசாங்கத்துடன் இருந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் பற்றி எந்த அக்கரையும் கொள்ளாது தனது சுகபோக அரசியலில் வாழ்ந்துவிட்டு இன்று தன்னால் எதுவும் முடியாத நிலையில் போலி வார்த்தைகளையும் கொக்கரிப்புக்களையும் செய்து வருவது வேடிக்கையான விடயமாகவே பார்க்கவேண்டி இருக்கின்றது. ஆனால் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இவர்களது எந்தவிதமான கொக்கரிப்பிற்கும் அடிபணியாது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

திருக்கோயில் விபுலானந்தா அகடமி கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கும், கல்வியற்கல்லூரிகளுக்கும் தெரிவான மாணவர்களையும், கல்விப்பொது சாதாரண தரப்பரீட்சையில் அதியுயர் சித்திகளை பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவித்து விருது வழங்கும் விழாவானது சனிக்கிழமை திருக்கோயில் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கவீந்திரன் கோடீஸ்வரன் அங்கு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.