சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடி வீடொன்றிற்குள் சென்று பெண் மீது தாக்குதல் நடத்தி காயமேற்படுத்திய சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்ற நான்கு பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறும் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை மன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது

அட்டாளைச்சேனை-06 ஆம் பிரிவில் உள்ள வீடொன்றிற்கு கடந்த புதன் கிழமை இரவு 8 மணியளவில் இருவர் வந்துள்ளனர் வீட்டில் வீட்டுக்கார பெண்ணும் அவரது சகோதரிகள் இருவரும் இருந்துள்ளனர் வீட்டுக்கு வந்தவர்களில் ஒருவர் வௌியில் நின்றுள்ளார் அதன்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து ஏன் வீதியில் நிற்கிறாய் என கேட்டு இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சண்டை ஏற்பட்டுள்ளது அதனையடுத்து வீட்டுக்கார பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையையடுத்து பக்கத்து வீட்டுக்காரரும் அவரது உறவினர்களும் குறித்த வீட்டுக்குள் புகுந்து கத்தியாலும்,கையாலும்,கல்லாலும்பெண்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் வீட்டுக்கார பெண் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலுக்குள்ளான குறித்த பெண் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பக்கத்து வீட்டுக்காரரும் அவரது உறவினர்கள் 4பேரும் கைது செய்யப்டு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் வௌிநாடு ஒன்றிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.