முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த அபாய வரைபடம் மற்றும் அனர்த்த கைநூல் தொடர்பான கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டம் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டம் மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக எமது மாவட்டம் அடிக்கடி அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அதே நேரம் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ந்து மாறி மாறி வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு நிலைமைகளினால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாக எதிர்காலத்தில் இந்த வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களின் போது எவ்வாறு முகம் கொடுக்கலாம் இதற்கான ஆளணி மற்றும் ஏனைய முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமாக இன்றைய தினம் இந்த கூட்டத்தை நாம் ஒழுங்குபடுத்தி இருந்தோம்.

அந்த வகையில் எங்கள் மாவட்டத்தில் சகல திணைக்களங்களின் தலைவர்களும் இதில் பங்குபற்றியிருந்தார்கள். மற்றும் முப்படையின் சிரேஸ்ட அதிகாரிகளும் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் ஏற்படவிருக்கும் அனர்த்த நிலைமைகளின் போது வினைத்திறனாக செயற்படுவதற்கும் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போது ஏற்பட்ட குறைகளை தீற்பதர்க்கும் இந்த கூட்டம் தீர்வாக அமையும் என தெரிவித்தார் .