(நா.தினுஷா)

சுமார் 7 இலட்சத்து  50 ஆயிரம் வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றை விரைவாக விசாரணை செய்வதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும்  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். 

 

தேசிய மத்தியஸ்த தின வைபவம் இன்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.  அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதுடன், வெளியினரின் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என்றும் நீதித்துறை முழு சுதந்திரமாக செயற்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமையின் காரணமாக அனேமான அபிவிருத்தி பணிகள் நிறைவு செய்யப்படாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தன. மத அடிப்படைவாத செய்றபாடுகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடர்க் குண்டுத்தாக்குதல்களினால்  எமது மக்கள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் நாளைய தினம் என்ன நடக்கும் என்று எவராலும் குறிப்பிட முடியாது.  

அத்துடன் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு இடமளிக்க போவதில்லை.  அரசியல் நோக்கங்களுக்காகவோ அரசியல் பழிவாங்கல்களுக்காகவோ நாங்கள் செயற்பட வில்லை. மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணைகளை நடைமுறைப்படுத்தவே முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.