அம்பாறை மாவட்டத்தின் ஆழ்கடல் பிரதேசத்தில், கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களின் வலையில் சிக்கிய மீன்களை திருடிவரும் கொள்ளைச் சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து கல்முனையில் மீனவர்கள் இன்று (25) பிற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

 இவ்வார்ப்பாட்டத்தினை அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாஜம் மற்றும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம் என்பன இணைந்து இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

 ஆழ்கடலில் வலையில் சிக்குகின்ற மீன்களை திருடும் சம்பவம் சுமார் எட்டு வருடங்களாக இடம்பெற்று வருவதாக அம்பாறை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாஜத்தின் தலைவர் ஏ.பி.ஏ. றஹீம் இதன் போது தெரிவித்தார்.

 இதனால் கடற்தொழிலாளர்களின் பல்லாயிரம் ரூபா பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்படுவதுடன் கஷ்டப்பட்டு பிடிக்கின்ற மீன்களையும் களவு கொடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 குதிரை வலு கூடிய இயந்திரப் படகினைப் பயன் படுத்தியே இவ்வாறான ஆழ்கடல் மீன்கொள்ளைச் சம்பங்கள் இடம்பெற்று வருவதுடன், உயிர் அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

 கல்முனை பிரதேசத்திலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பல தரப்பட்ட மீன்பிடிப் படகுகளில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் இதன் மூலம் தங்களது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இத்திருட்டுச் சம்பவங்கள் பெரும் சவாலாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

 இத்திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு பல முறை முறைப்பாடு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படாததனையிட்டு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.