சிறுநீரகம் செயலிழந்துவிட்டால் இரத்தத்தில் அழுக்கு சேரத்தொடங்கும். இந்த அழுக்கு இரத்தத்தில் சேராமல் தடுக்க செயற்கை முறையில் சிறுநீரகத்தின் செயற்பாடுகளை மருத்துவ உபகரணங்கள் மூலம் உடம்புக்கு வெளியே செய்வது, அதாவது ஒரு செயற்கை சிறுநீரகம் போல் செய்வது டயலிசிஸ் எனப்படுகிறது. 

சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடு 10 வீதத்திற்கு கீழே வந்துவிட்டால் அவர்களுக்கு டயாலிசிஸ் அவசியமாகிறது. சிறுநீரகம் செயலிழந்து போனவர்கள் வாரத்திற்கு மும்முறை டயலிசிஸ் செய்துகொள்வது அவசியம். 

ஒருவேளை சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிட்டால் அவர்களுக்கு மூன்று விதமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஹீமோ டயலிசிஸ்

உடலிலுள்ள இரத்தத்தை வெளியே எடுத்து மீண்டும் உடலுக்குள் செலுத்துவது. வாரத்திற்கு 3 முறை இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும்.

பெரிடோனியல் டயலிசிஸ்

வயிற்றுக்குள் ஒரு குழாய் மூலம் சுத்திகரிப்பு திரவத்தைச் செலுத்தி சில மணி நேரம் கழித்து எடுத்துவிடல். தினமும் 4 அல்லது 5 முறை இதைச் செய்ய வேண்டியதிருக்கும்.

சிறுநீரக மாற்று சிகிச்சை

மேற்படி 2 டயலிசிஸ{ம் வாழ்நாள் முழுவதும் பணச் செலவை ஏற்படுத்துவதால் நடுத்தர மக்களால் இதைத் தொடர்ந்து செய்ய முடியாது. எனவே இன்னொருவருடைய சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துகொள்வது தான் சிறுநீரக செயலிழப்புக்கு நிரந்தரத் தீர்வு. உறவினர்கள், நண்பர்கள், இரத்த சம்பந்தம் உள்ளவர்களே சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க முன்வந்தால் நோயாளியின் இரத்தப் பிரிவு மற்றும் உடல் ஏற்றுக் கொள்ளும் சக்தி போன்றவற்றைக் கணக்கிட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆரம்பத்தில் செலவுகள் அதிகமானாலும் போகப் போக சாதாரண வாழ்க்கை முறைக்கு வந்துவிடலாம்.

சிலருக்கு, சிறுநீரக தானம் கொடுத்தவர்கள், பெற்றவர்களுக்கு தாம்பத்திய செயற்பாடுகள் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்படும். இது தேவையற்ற சந்தேகம். இல்லற வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களுக்கும் சிறுநீரகத்தின் செயற்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்த பெண்கள் குழந்தை பெற்றிருக்கிறார்கள். சிறுநீரக தானம் கொடுத்துவிட்டால் அதன்பிறகு இல்லற சுகம் அனுபவிக்க முடியாது என்பதெல்லாம் மக்களிடையே உள்ள அறியாமையாகும்.