‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். 

இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் திருட்டுத்தனமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினிகாந்துக்கு பொலிஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.

ரஜினிகாந்த் நட்சத்திர ஹோட்டல் முன்னால் ஸ்டைலாக நடந்து வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். அதுவும் இணையத்தில் வந்தது. இதைப் பார்த்த சிலர் படப்பிடிப்பு முடியும் முன்பு அனைத்து காட்சிகளும் இப்படி சமூக வலைத்தளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட தொடங்கினர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.

தொலைபேசி கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில பொலிஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

ரஜினியின் பொலிஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படங்கள் எப்படி வெளியானது என்று விசாரணை நடக்கிறது.