வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நவீன ‘ரோபோ’ கண்டுபிடிப்பு

By Daya

25 Jul, 2019 | 11:41 AM
image

அபுதாபியில் அமீரக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் நவீன ‘ரோபோ’வை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தவகல் வெளியிட்டுள்ளது. 

அபுதாபியில் அமீரக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் முப்பரிமாண பிரதியெடுக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நவீன ‘ரோபோ’ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆய்வு கூடங்களின் முதன்மை பயிற்றுனர் டாக்டர் படி நஜ்ஜார் தலைமையிலான குழுவினர் ‘ரோபோ’வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த ‘ரோபோ’வின் உடல் பகுதிகள் மற்றும் செயற்படும் பாகங்கள் அனைத்தும் ‘3 டி பிரின்டிங்’ எனப்படும் முப்பரிமாண பிரதியெடுத்தல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நுண்ணறிவு திறன் கொண்ட ‘ரோபோ’க்களை உருவாக்க 2 லட்சம் அமெரிக்க டொலர் தேவைப்படும். ஆனால் இந்த புதிய ‘ரோபோ’ முப்பரிமாண தொழில்நுட்பத்தில், 25 ஆயிரம் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ‘மோஷன் சென்சார்’ எனப்படும் அசைவை உணரும் தொழில்நுட்பமும் உள்ளது. அதனால் அந்த அசைவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை முன் கூட்டியே உணர்ந்து அதற்கேற்றவாறு இந்த ‘ரோபோ’ செயற்படும்.

கூடுதலாக ‘டெக்ஸ்டைல் சென்சார்’ எனப்படும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த ‘ரோபோ’வை இயக்குபவருக்கு அங்கு நிலவும் வெப்பத்தின் அளவு, கடினம் மற்றும் மென்மையான பொருட்கள் இருப்பதை அப்படியே உணரச்செய்யும். வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கு இந்த ‘ரோபோ’ திறமையுடன் செயற்படும்.

இதனை ரிமோட் மூலம் ஒருவர் தன் கட்டுப்பாட்டில் இயக்கலாம். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பாதுகாப்புத்துறை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறப்படும் என பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right