மன்னார் புதிய பஸ் தரிப்பிட பகுதியில் அமைந்துள்ள புத்தக மொத்த விற்பனை நிலையம் ஒன்று இன்று வியாழக்கிழமை (25) காலை 5 மணியளவில் தீப் பரவியுள்ளது. 

குறித்த விற்பனை நிலையம் முழுமையாக எரிந்து சாம்பளாகியுள்ளது. சுமார் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. 

வழைமை போல் நேற்று புதன் கிழமை (24) இரவு குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மூடப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலையத்தினுள்  இருந்து தீ மற்றும் புகை வெளி வருவதை அவதானித்தவர்கள் உடனடியாக குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு தகவல் வழங்கினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தீயை அணைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும், மன்னார் நகர சபைக்கும் தெரியப்படுத்தினர்.

இந்த நிலையில் மன்னார் நகர சபை மற்றும் இராணுவத்தினர் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.எனினும் குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களுமே எரிந்து சாம்பளாகியுள்ளது.

தீ அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பரவாத வகையில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.