அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களுக்களை மாத்திரம் பெற்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

அதன்படி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 23.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 5 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 23 ஓட்டத்துடனும், ஜோ ரூட் 2 ஓட்டத்துடனும், ஜோனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் டக்கவுட்டுடனும், சாம் கர்ரன் 18 ஓட்டத்துடனும், பிரோட் 3 ஓட்டத்துடனும், ஒலி ஸ்டோன் 19 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ஜேக் லெச் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அயர்லாந்து அணி சார்பில் டிம் முர்தாக் 5 விக்கெட்டுக்களையும், மார்க் அடேர் 3 விக்கெட்டுக்களையும், பாய்ட் ராங்கின் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இங்கிலாந்து அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஓவர்களுக்குள் ஆட்டமிழந்துள்ளமை இது ஐந்தாவது சந்தர்ப்பம் என்பதுடன் 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சொந்த மண்ணில் மதிய நேர உணவு இடைவெளிக்கு முன்னர் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் அயர்லாந்து அணி 32 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுள்ளது.