ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அங்கு விஷேட உரையாற்றவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டம் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ நா தலைமையகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை இடம்பெறவுள்ளது.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் செயற்படும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவராக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க , இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளை தனது அலுவலகத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைப்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஷேட உரையாற்றவுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறும் உலக தலைவர்கள் பேரவையின் மாநாட்டில் தற்போது கலந்துக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க அங்கிருந்து ஐ நா செல்வார் என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.