இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து மருத்துவ சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில் ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள பொதுஜனபெரமுனவின் வருடாந்த மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளாராக அறிவிக்கப்படுவார் என அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மாத்திரம் நாங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம் என  முன்னாள் படை அதிகாரி  சரத்வீரசேகர ரிப்பப்ளிக் நெக்ஸ்ட் ஆங்கில இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

வேறு யாராவது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நாங்கள் அவரிற்கு ஆதரவுவழங்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை கேட்டுக்கொள்வார் அவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை முன்மொழிவார்கள்  என தெரிவித்துள்ள மிலிந்த ராஜபக்ச அதன் பின்னர் அதனை ஏற்குமாறு கோத்தபாய ராஜபக்ச அழைக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கோத்தபாய ராஜபக்சவிற்கு இன்று தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.