தாயும், தந்தையும் தொழிலுக்காக வெளிநாட்டிலிருக்கும் வேளையில், அம்மம்மாவின் அரவணைப்பிலிருந்த 8ஆம் வகுப்பு மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மட்டக்களப்பின் செங்கலடி பகுதியில் நடந்தேறியுள்ளது.

செல்வராசா தரணியா எனும் 13 வயது நிரம்பிய மேற்படி மாணவியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மரணமான பாடசாலை மாணவியும், அவரது 15 வயதுடைய சகோதரியும்,17 வயதுடைய சகோரதரனும் மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்துள்ளனர்.

தொழில் நிமித்தம் பெற்றோர் இருவரும் வெளிநாடு சென்றுள்ளதால், பிள்ளைகள் மூவரையும் அம்மம்மாவின் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பரீட்சை முடிந்து வீடு திரும்பிய தரணியா என்ற மாணவி, தனது அம்மம்மா வெளியே சென்ற சந்தர்ப்பம் பார்த்து, தனது துப்பட்டாவால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவத்தின் போது, வெளியே சென்று வீடு திரும்பிய அம்மம்மா, வீட்டின் அறையை தட்டி, தரணியாவை அழைத்துள்ளார். இருந்தும் பதிலேதும் அவரிடம் இருந்து வராததால், உடை மாற்றுகிறார் என எண்ணியுள்ளார், சிறிது நேரத்தின் பின்னர் அழைக்கவே, மீண்டும் எதுவித சத்தமும் இல்லாததால், வீட்டின் ஜன்னல் அறையை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது, பாடசாலை சீறுடையுடன் தூக்கில் தொங்கிய தரணியாவை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறிய  அம்மம்மா, உடனே ஏறாவூர் பொலிசாருக்கு விடயத்தை தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்நிலையில், மாணவியின் இடது கையில் "ஐ லவ் யூ (I LOVE YOU)" என்ற வாசகம் சிவப்பு நிறத்தால் எழுதப்பட்டிருப்பதையும், மணிக்கட்டு பகுதியில் இதயத்தின் படம் வரையப்பட்டிருப்பதையும் அவதானித்த மரண விசாரணை அதிகாரி, "ஐ லவ் யூ (I LOVE YOU)" என்ற வாசகத்திற்கு மேல் யாரோ ஒருவரின் பெயர் தெளிவில்லாமல் எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மாணவியின் தந்தை வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாகவும் தெரியவருகிறது. அத்தோடு குறித்த தற்கொலை சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.