இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜோன்சனுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட  உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் புதிய பிரதமாராக, போரிஸ் ஜோன்சன் நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. 

பிரதமர் பதவிக்கு, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரியான, ஜெரமி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. 

இந்நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெரமி ஹன்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இங்கிலாந்தின்  புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜோன்சனுக்கு இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட  உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன தனது வாழ்த்தில்,

இங்கிலாந்தின் பிரதமராக கடமைகளை ஏற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். எங்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமரான போரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துக்கள். அவர் பெரியவராக இருப்பார் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா பிரதமர்ஸ்கொட் மொரிஸன், இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட  போரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துக்கள். அவருடன் பணியாற்றுவதற்கும்  அடுத்த மாதம் ஜி 7 மாநாட்டில் சந்திப்பதற்கும் நான் எதிர்பார்க்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்