தனது நாட்டில் 40 பயங்கரவாதக் குழுக்கள் இருப்பதாகவும் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையான பயங்கரவாதிகள் ஆயுதங்கள் சகிதம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டனில் நேற்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் அவர் அமெரிக்க காங்கிரஸின் பாகிஸ்தான் விவகாரக் குழுவின் தலைவியான ஷீலா ஜக்சன் லீயினால் கப்பிட்டல் ஹில்லில் அளிக்கப்பட்ட விருந்துபசாரத்தில் உரையாற்றுகையில் " பாகிஸ்தானின்  அரசாங்கங்கள் குறிப்பாக கடந்த 15 வருடங்களாக பதவியில் இருந்த அரசாங்கங்கள் அமெரிக்காவுக்கு உண்மையைச் சொல்லவில்லை. 40 வேறுபட்ட பயங்கரவாதக் குழுக்கள் எனது நாட்டில் இயங்கிவருகின்றன " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரை நாம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.9/11 பயங்கரவாத தாக்குதல்களுடன் பாகிஸ்தானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அல் கயெடா இயக்கம் ஆப்கானிஸ்தானிலேயே இருந்தது. பாகிஸதானில் தீவிரவாத தலிபான்கள் இல்லை.ஆனால், நாம் அமெரிக்காவின் போரில் இணைந்துகொண்டோம்.

துரதிர்ஷ்டவசமாக, நிலைவரங்கள் எல்லாம் தவறாகப்போய்விட்டன. எனது அரசாங்கத்தை நான் குற்றஞ்சாட்டுகிறேன். பாகிஸ்தானில் உள்ள உண்மை நிலைவரங்களை நாம் அமெரிக்காவுக்கு சொல்லவில்லை. பாகிஸ்தானில் நிலைவரங்கள் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

 "எனது நாட்டில் 40 வேறுபட்ட பயங்கரவாதக் குழுக்கள் இயங்குகின்றன.  உயிர் தப்பி வாழுவோமா என்ற கவலையுடன் எம்மைப்போன்ற ஆட்கள் காலத்தைக் கடத்திவந்திருக்கிறோம். நாம் இன்னும் கூடுதலான செயற்படவேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. போரை அமெரிக்கா வெல்வதற்கு நாம் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அந்த நேரத்தில் எனது நாடு அதன் சொந்த இருப்புக்காக போராடிக்கொண்டிருந்தது.

"எனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனும் ஏனைய உயர்மட்ட தலைவர்களுடனும் முக்கியமான சந்திப்புகளை நடத்தினேன். செய்யவேண்டியவை எவை என்பதை அவர்களுக்கு நாம் விளக்கிக்கூறினோம். முதலில் எமக்கிடையிலான உறவுமுறை பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமையவேண்டும்.

சமாதானச் செயன்முறைகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானினால் செய்யக்கூடியது என்ன என்பதை நேர்மையாக அமெரிக்காவுக்கு நாம் சொல்லவேண்டும்.

"பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு தலிபான்களை மேசைக்கு கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் தன்னால் இயன்றவரை முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை நாம் சிறப்பாகவசெயற்பட்டிருக்கின்றோம்.

சாமாதான செயன்முறைகள் சுலபமானவை அல்ல என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ளவேண்டும்.

"இதை சுலபமானது என்று எதிர்பார்க்காதீர்கள்.ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் நிலைவரம் சிக்கலானதாக இருக்கிறது. நாம் எம்மால் இயலக்கூடியதை முழுமையாகச் செய்வோம் என்பதை உங்களுக்கு உறுதிபடக்கூறுகிறேன். 

பாகிஸ்தான் முழுமையாக என் பின்னால் நிற்கிறது.பாகிஸ்தான் இராணுவம், பாதுகாப்பு படைகள் எல்லாமே என் பின்னால் நிற்கின்றன.அமெரிக்காவுக்கு இருக்கக்கூடிய குறிக்கோளே எமக்கும் இருக்கிறது.

அதாவது ஆப்கானிஸ்தானில் சாத்தியமான அளவுக்கு விரைவாக சமாதானத்தீர்வு ஒன்றைக் கொண்டுவந்துவிடவேண்டும். பாகிஸ்தானுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் தற்போது வித்தியாசமான ஒரு மட்டத்தில் இருக்கின்றன என்று நம்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை மிகுந்த வேதனையுடன் நோக்கினோம்.இனிமேல் உறவுமுறை முற்றிலும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று நம்புகிறோம்" என்று இம்ரான்கான் தமதுரையில் கூறினார்.

40 ஆயிரம் பயங்கரவாதிகள் 

பாகிஸ்தானில் இன்னமும் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையான பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்.அவர்கள் ஆப்கானிஸ்தானின் அல்லது காஷ்மீரின் சில பகுதிகளில் பயிற்சிகளைப் பெற்று சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டனில் உள்ள சமாதானத்துக்கான அமெரிக்க நிறுவனத்தில் பிறிதொரு உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது தலைமையிலான தெரீக் -- ஈ - இன்சாவ் கட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னதாக நாட்டில் இயங்கிவருகின்ற தீவிரவாதக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கான துணிவாற்றல் முன்னைய அரசாங்கங்களிடம் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

 "பாகிஸ்தான் அரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தலிபான்கள் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான பொது பாடசாலையொன்றில் 150 மாணவர்களைக் கொலை செய்தனர். அந்தக் கொடூரத்தை அடுத்து சகல அரசியல் கட்சிகளும் தேசிய நடவடிக்கைத் திட்டம் ஒன்றி் கைச்சாத்திட்டன. பாகிஸ்தானுக்குள் எந்தவொரு தீவிரவாதக்குழுவும் இயங்க அனுமதிப்பதில்லை என்று நாம் முடிவெடுத்தோம்.

 "நாம் ஆட்சிக்கு வரும்வரை, அரசாங்கங்களிடம் அரசியல் துணிவாற்றல் இருக்கவில்லை. ஏனென்றால்  தீவிரவாதக்குழுக்கள் என்று வரும்போது ஆயுதபாணிகளான 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் உறுப்பினர்கள் அந்த குழுக்களில் அங்கம் வகித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறா்கள்.அவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீரின் பகுதிகளில் பயிற்சிபெற்று சண்டையில் ஈடுபடுகிறா்கள்.

"எமது அரசாங்கமே தீவிரவாதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்த முதல் அரசாங்கமாகும். முதல் தடவையாக இது நடைபெறுகின்றது. தீவிரவாதிகளின் நிறுவனங்களை, மத போதனை நிலையங்களை நாம் சுவீகரித்தோம்.இப்போது எமது நிர்வாகிகள் அவற்றை பரிபாலனம் செய்கிறார்கள்" என்று அவர் தனதுரையில் மேலும்கூறினார்.

 ( எசியன் நியூஸ் இன்ர்நாஷனல் )