உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்ததாக இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் வாக்கமூலமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே கிடைத்த எச்சரிக்கைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே புலனாய்வு தகவல்கள் கிடைத்தன அவற்றை உரிய அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர்  ஜஹ்ரான்  வேறு சில குற்றங்களிற்காக விசாரிக்கப்பட்டார் என ரவி செனிவரட்ண தெரிவித்துள்ளார்.

 வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தாஜ்சமுத்திரா ஹோட்டலும் இலக்குவைக்கப்பட்டது என்ற முடிவிற்கு விசாரணையாளர்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திராவில் இரண்டு தடவை குண்டை வெடிக்கச்செய்வதற்கான முயற்சிகளில் தற்கொலை குண்டுதாரி ஈடுபட்டார் ஆனால் அவை வெற்றியளிக்கவில்லை என ரவி செனிவரட்ண பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தாஜ்சமுத்திரா ஹோட்டலில் சில முக்கிய பிரமுகர்கள் காணப்பட்டதன் காரணமாகவே அங்கு குண்டுதாக்குதல் இடம்பெறவில்லை என தங்களிற்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.