பார்வையற்றோருக்கு உதவும் வெள்ளைப்பிரம்புடன் உதிரியாக உணர்திறனையும் இணைத்து ஊன்றுகோல் ஒன்றை கண்டு பிடித்து அசத்திய இளைஞனை தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவரால் பாராட்டப்பட்டுள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது ஜினான் என்ற உயர்தரத்தில் கற்கும் மாணவனே இந்த புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.

மருதமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இச்சாதனையைப் புரிந்த மாணவனுக்கு  ஜினான் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் (NAITA - National Apprentice and Industrial Training Authority) தலைவர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் பாராட்டப்பட்டார்.

தனது புத்தாக்க முயற்சி குறித்து   மாணவன் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் தலைவரிடம் விளக்கினார்.

இது குறித்து  அம்மாணவன் கூறும்போது, கண் தெரியாதவர்களுக்கு உதவும் வெள்ளைப்பிரம்பிலே நான் சில சென்ஸர்களை (உணரிகளை) இணைத்துள்ளேன்.

இதன் மூலம் கண்தெரியாதவர்கள் முன்னாலுள்ள பொருளைத்தட்டி உணரத் தேவையில்லை 30 சென்ரி மீற்றர் தூரத்தில் ஒலி எழுப்பும் அமைப்பு இதில் உள்ளது.விஷவாயுத் தாக்கத்தை உணரும் சென்ஸரும் இதில் உள்ளது.

இரவு நேரத்திலும் வீதியைக் கடக்க உதவும் LED சென்ஸர் லைட் உள்ளது இது வாகன ஓட்டுனர்களுக்கும் சமிக்ஞை தரும். கண் தெரியாதவர்களுக்கு செவிப்புலன் இல்லாதிருந்தால் ஒலியதிர்வு கைப்பிடியில் உள்ளது. வீட்டிற்குள்ளிருந்து இன்னொருவர் இயக்கும் வண்ணம் புளுரூத் Bluetooth வசதியும் உண்டு. என அவற்றை செயற்படுத்தியும் காட்டினார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நைற்றா தலைவர் நஸீர் அஹமட், இளம் கண்டுபிடிப்பாளர்கள் பலர் நம்மிடையே இருக்கின்றனர். திறமைகளை அறிந்து அவர்களின் திறன்சார்ந்த முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு நல்கவேண்டியது நமது பொறுப்பாகும்.

அவ்வாறானவர்களின் திறமைகள் மென்மேலும் வளர என்னாலான உதவிகள் அனைத்தையும் வழங்குவேன்.

இன்று நாளாந்தம் வளர்ந்து செல்லும் தகவல் தொழில்நுட்பம் எமக்கு பல்வேறுவழிகளில் பயன்தரும் அம்சங்களை- வாய்ப்புகளை தந்து வருகின்றது. இதனை நமது இளம் சமூகத்தினர் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த முன்வரவேண்டும்” என்றார். ‪