(எம்.எப்.எம்.பஸீர்)

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான உபாலி தென்னகோன் மற்றும் அவரது மனைவி மீதான தாக்குதல் நடத்தப்பட்ட  விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஷவை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்ட, சாட்சியாளருக்கு காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தேவையான வசதிகளை செய்யுமாரு கம்பஹா நீதிவான் டீ.ஏ.ருவன் பத்திரண குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் இன்று கம்பஹா நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சந்தேக நபரான  கோப்ரல் லலித் ராஜபக்ஷ, அடையாள அணிவகுப்புக்காக மன்றில் சிறை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போதே மேற்கண்ட விடயத்தை நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவத்தார் அத்துடன் குறித்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்ததுடன், அதுவரை சந்தேக நபரான கோப்ரல் லலித் ராஜபக்ஷவையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.