(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

துறைமுக நகர திட்டத்தில் புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்துவதுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிதி நகரத்திற்கு 15-20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளை கொண்டுவருவதும் அதன் மூலமாக இலங்கையில் தனி நபர் வருமானத்தை 1000 டொலர்களினால் அதிகரிக்க செய்வதுமே எமது அரசாங்கதின் நோக்கமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

அத்துடன்  இலங்கை அரசாங்கத்திற்கு உள்ள நிலத்தில் சர்வதேச பாடசாலை, சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலை ஆகியவற்றை முதலில் உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். இன்று கார் பந்தைய நிலங்களை பூங்காவாக மாற்றி ஏனைய இடங்களில் வர்த்தக மையமாக மாற்றவும் பொதுமக்கள் பயன்பாட்டு மையங்கள் மற்றும் தொடர்மாடி வீடுகளை அமைக்வுள்ளோம். 

இதில் பொதுப்போக்குவரத்து எவ்வாறு என்ற கேள்வி இருந்தது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிவேக பாதைகளுடன் தொடர்புபடுத்திய போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகள் என்பவற்றை நாம் உருவாக்கவுள்ளோம். இந்த பகுதியை நிதி நகரமாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்து சமுத்திரத்தில் பிரதான மையமாக மாற்றுவதே எமது இலக்காகும். இதற்கு அப்பால் இன்னொரு கடல் நகரை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். துறைமுக நகரை முடித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.