“மஹவெலிய - சங்ஹிந்தியாவே கங்காவ” (மகாவலி - நல்லிணக்க நதி) மற்றும் “95ன் பசு மஹவெலி” (95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி) நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மத்திய மலைநாடு, ரஜரட்டை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நீரினைக் கொண்டுசென்று ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி நதியின் பயணமே “மகாவலி - நல்லிணக்க நதி” என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி திட்டத்தில் பின்தங்கிய கட்டமாகக் காணப்பட்ட மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கம் உள்ளிட்ட உலர்வலய மக்களின் கண்ணீர் கதையை நிறைவுக்குக் கொண்டுவந்த பாரிய நீர்ப்பாசன புரட்சி பற்றிய வரலாறே “95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி” நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி திட்டம் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இன்றும் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மக்களின் நீர்த் தேவையை பூர்த்திசெய்து, வயல் நிலங்களை செழிப்படையச் செய்யும் என்பதுடன், இதற்கு புத்துயிரூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பாரிய பங்காற்றி வருகின்றார்.

1995 முதல் கடந்த 15 வருட காலத்திற்குள் மகாவலி திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான எழுத்து மூலமான வெளியீடுகள் காணப்படாத குறையினை பூர்த்தி செய்யும் வகையிலேயே மகாவலி அதிகார சபையின் தலைமையில் “95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி” நூல்  எழுதப்பட்டுள்ளது. 

சிறந்த நீர் முகாமைத்துவ நிபுணரும் 1976 முதல் காலத்திற்கு காலம் மகாவலி திட்டத்துடன் இணைந்து செயற்பட்ட கலாநிதி எம்.யூ.ஏ.தென்னகோன் இந்நிகழ்வில் தலைமை உரையாற்றவுள்ளார். 

மேலும் அறிஞர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மகாவலி, சுற்றாடல் துறைகளுடன் தொடர்புடைய தொழில் நிபுணர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வர்.