(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று  அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள்  சுடுநீரை  ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதை  முதலில் சிங்கள சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள், ஏன் தமது மதவெறிகளைத் தூக்கிவைத்துவிட்டு நியாயபூர்வமாக இந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.