(இராஜதுரை ஹஷான்)

இரகசியமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள  பெருமளவிலான  கழிவு பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்கும் கடந்த அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.  2013.07.11ம் திகதி வெளியிடப்பட்ட 1818.30 இலக்க  வர்த்தமானியில் குப்பை  இறக்குமதி மற்றும்  மீள் ஏற்றுமதி தொடர்பில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாகவே  வெளிநாட்டில் இருந்து   பெருமளவிலான  கழிக்கப்பட்ட பொருட்கள் இரகசியமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதை எம்மால் தகுந்த ஆதாரத்துடன்  தெளிவுப்படுத்த முடியும். .

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இரகசியமான முறையில் செய்துக் கொண்ட செயற்பாடுகள் பகிரங்கப்படுத்தப்படும் போது அதன் ஆரம்பம் கடந்த அரசாங்கததிலே  ஏற்பட்டது என்பது குறிப்பிட்டு தம்மை நியாயப்படுத்திக் கொள்வது  பழக்கமாகி விட்டதொரு விடயமாகும்.  

இறக்குமதி செய்யப்பட்டுள்ள  கழிவுப் பொருட்களுக்கான அனுமதி தொடர்பான வர்த்தமானி கடந்த அரசாங்கத்திலே  வெளியிடப்பட்டது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை  பாராளுமன்ற உறுப்பினர் முஜ்பூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளமை தவறானதாகும்.

கடந்த அரசாங்கத்தில் 2013.07.11ம் திகதி  1818.30 இலக்கத்தில் வெளியிட்ட  வர்த்தமானியில் எவ்விடத்திலும்  பிற நாட்டு  கழிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அவை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்யப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. 

ஆகவே இவ்விடயம் தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  சுயாதீனமான  விசாரணைகளை முன்னெடுக்க  வேண்டும் என்றார்.