(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் 3வழக்குகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் ஒருவருடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 3மணிக்கு இருந்த வேளையில், சபையில் திடீரென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதுதொடர்பில் சபாநாயகரிடம் கேள்விகேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினர். அதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த சபாநாயகர் கருஜசூரிய இடம்பெற இருந்த சந்திப்பை இடைநிறுத்துவதாகவும் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்ற இன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், 

நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது நீதியரசர்களை பலவந்தப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணாகும். ஆனால் வெளிவிவகார அமைச்சின் மேலதிக பதில் செயலாளர் அஹமத் ஏ. ஜாவாதின் கையெழுத்தில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், எமது நீதிமன்றங்களில் தற்போது இடம்பெற்றுவரும் வழக்குகள் சிலவற்றின் தற்போதைய நிலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசேட தூதுவருக்கு விளக்கம் தெரிவிக்க வருமாறு தெரிவித்து கடிதத்தின் பிரதிகள் பிரதமரம நீதியரசர், நீதி அமைச்சர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் வெளிநாட்டு பிரஜைகளுடன் கருத்து பரிமாற்றிக்கொள்ள நீதிபதிகளுக்கு அழைப்பு விடுப்பதானது எமது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அதனால் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது தெரிவித்தார்.