19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரில் தம்புள்ளை அணியை வீழ்த்தி கொழும்பு அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கமில் மிஷாரா தலைமையிலான கொழும்பு அணியும், நிப்புன் தனஞ்சய தலைமையிலான தம்புள்ளை அணியும் சம்பியனனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் கமில் மிஷாரா (120) ,  அஹான் விக்கிரமசிங்க (127) ஆகிய இருவரும் சதங்கள் அடித்து தமது அணியை வலுவான நிலைக்கு இட்டனர். 

ஆரம்ப வீரராக களமிறங்கிய  கொழும்பு சாஹரா கல்லூரி மாணவன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அஷியான் டேனியல் 2 விக்கெட்டுக்களை  வீழத்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 42.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களான சுப்புன் சுமனரட்ண (35), நிப்புன் தனஞ்சய (26) சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர். இறுதிக்கட்டத்தில் போராடிய தினேத் (51), லக்சான் (65) அரைச் சதங்களுடன் ஆட்டமிழந்ததனர்.

பந்துவீச்சில் தில்மின் ரத்நாயக்க 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தொடர் நாயகனாக கமில் மிஷார தெரிவானார். 

(எம்.எம்.சில்வெஸ்டர் )