பங்களாதேஷ் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 26 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிந்து ஓய்வுபெறுவார் என இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்தார்.

இலங்கை, பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் சரவ்தேச ஒருநாள் போட்டித் தொடர் குறித்து ஊடக சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே அணித்தலைவர் திமுத் கருணாரட்ண மேறகண்டவாறு தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியுடனான 3 போட்டிகளிலும் விளையாடுமாறு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் வேண்டுகோள்விடுத்திருந்தபோதும், அதனை மறுத்த மலிங்க முதல் போட்டியில் மாத்திரம் விளையாடிவிட்டு ஓய்வு பெறுவதாக சமூகவலைத்தளத்தில் மலிங்க கூறியிருந்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த யோர்க்கர் மன்னன் லசித் மலிங்க சர்வதேச ஒருநாள் அரங்கில் 219 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 335 விக்கெட்டுக்களை சாய்துள்ளார். ஏற்னவே, டெஸ்ட் அரங்கில் ஓய்வுபெற்றுள்ள மலிங்க,101 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாட எண்ணியுள்ள மலிங்க அடுத்தவருடம் நடைபெறவுள்ள உலக இருபது 20 கிண்ணத்துடன் சர்வதே கிரிக்கெட் அரங்கிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

(எம்.எம்.சில்வெஸ்டர் )