(ஆர்.விதுஷா)

கொழும்பு - புதிய மெகசின் சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக தமிழ் அரசியல் கைதியயொருவர் மேற்கொண்டிருந்த  உண்ணா விரதப் போராட்டத்தை அமைச்சர் மனோகணேசனும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் நீராகரம்  கொடுத்து இன்று காலை முடித்து வைத்துள்ளனர்.

திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான  வடமராட்சி கரவெட்டியை சேர்ந்த கனகசபை தேவதாசன் என்ற 62  வயதுடைய முதியவே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகள் இன்றி தாமே  வாதிடுவதாகவும் அதனால் போதுமான சாட்சியத்தை திரட்ட  முடியாது போவதால் தனக்கு பிணை வழங்கக்கோரியே இவ்வாறு  உண்ணாவிரத போராட்டத்தில் அவர்  ஈடுபட்டுபட்டிருந்தார்.  

இந்த நிலையில் அமைச்சர் மனோகணேசனும், வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதனும் அவரை கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு இன்று பார்வையிட்டனர்.

இதன்போது அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று   உறுதியளிக்கபட்டதையடுத்து அமைச்சர் மனோகணேசன் அவருக்கு  நீர்  ஆகாரம் அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

கோட்டை  ரயில் நிலையத்தின்  குண்டுவெடிப்பு  சம்பவத்துடன்  தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.