200 மில்லியன் டொலர் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வான் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுடன் மோதியதை தொடர்ந்து பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின்  சிட்னியின் வடமேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

200 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருளுடன் வந்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை காருடன் மோதியது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

ஈஸ்ட்வூட் காவல்துறை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்களுடன் மோதிய பின்னர் குறிப்பிட்ட வாகனம் நிற்காமல் தொடர்ந்து சென்றது என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பாரிய சத்தத்தினை தொடர்ந்து சிசிடிவி கமராக்களில் நடந்ததை அவதானித்த காவல்துறையினர் ரைட் பகுதியில் வைத்து குறிப்பிட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் வாகனத்தை சோதனையிட்டவேளை 273 கிலோ ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வாகனத்திற்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் இலகுவாக முறியடித்த போதைப்பொருள் கடத்தல் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபரிற்கு இது மிகவும் மோசமான நாள் அவ்வளவு பெரிய போதைப்பொருட்களுடன் காவல்துறை வாகனத்தில் ஒருவர் மோதுவது முன்னர் இடம்பெறாத விடயம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.