வேன் சாரதியொருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் சாரதியொருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பிரபல கணிதப்பாட ஆசிரியர்  உட்பட நால்வர் இன்று (22) நீதிமன்றில் சரணடைந்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வர் இன்றைய தினம் அத்தனகலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இவ்வாறு 4  பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேக நபர்களும் சரணடைந்தவர்களுமாக 8 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கடந்த 18 ஆம் திகதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.