திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து  இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது.

இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு  ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார்.

இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.