ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கேவி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை  வெளியாகியிருக்கிறது.

அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், சூர்யா நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘காப்பான்’. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, பாடலாசிரியர் வைரமுத்து,  இயக்குனர் கே வி ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல முன்னணி திரைக் கலைஞர்கள் பங்குபற்றினர்.

இவ்விழாவில் பங்குபற்றிய சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில்,“ கே வி ஆனந்த் திறமையான இயக்குனர். நான் நடித்த சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த காப்பான் படம் நிச்சயம் வெற்றிபெறும். சூர்யா விடாமுயற்சியால் முன்னேறி இருக்கிறார். நேருக்கு நேர் படத்தில் அவரது நடிப்பு பேசப்படும் படி இல்லை. அதன்பிறகு பாலாவின் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகனாக செதுக்கி, உயர்ந்த இடத்திற்கு வந்திருக்கிறார். 

காக்க காக்க, கஜினி, அயன் என்று பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார் சூர்யா.  சூரியாவையும் கார்த்தியையும் ஒழுக்கமானவர்களாக சிவக்குமார் வளர்த்திருக்கிறார். இருவருமே நல்ல பிள்ளைகளாக உருவாகி இருக்கிறார்கள். சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினிகாந்த் இதே கருத்தை பேசியிருந்தால் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே கூறினார்கள். சூர்யா பேசினாலும் மோடி கேட்பார். அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன் . 

மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். எனவே மாணவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. எனவே அவர் பேசும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த படத்தில் ஆர்யாவும் நடித்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் அகோரியாக அவர் நடித்திருந்ததைப் பார்த்து வியந்திருக்கிறேன். நான் ஒருமுறை இமயமலைக்குச் சென்றிருந்த போது கங்கை ஆற்றில் குளித்தேன். அப்போது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை கழன்று விழுந்துவிட்டது. இதனால் கவலைப்பட்டேன். எதிரே வந்த அகோரி ஒருவர் என்னை பார்த்து, ருத்ராட்ச மாலை உனக்கு வேண்டும் இல்லையா? அது கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றார். அதுபோல ஒரு ஆசிரமத்துக்கு சென்றபோது ஒரு பெண் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி விட்டு, எனக்கு ருத்ராட்ச மாலையை கொடுத்தார். இதுதான் அவர்களின் மகத்துவம்.” என்றார் ரஜினிகாந்த்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் வாரிசான நிகிதா ஒரு பாடலை பாடி பின்னணி பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.