(எம்.எம்.எஸ்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் கண்டி அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தம்புள்ளை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் ருவின் பீரிஸ் தலைமையிலான கண்டி அணிக்கும் நிப்புன் தனஞ்சய தலைமையிலான தம்புள்ளை அணிக்கும் இடையிலான  லீக் சுற்றிக் கடைசிப் போட்டி ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடத்தாடிய தம்புள்ளை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் லக்சான் கமகே (55), அஷியான் டேனியல் (30) பிரகாசித்தனர். இந்த ஜோடி 8 ஆவது விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.  பந்துவீச்சில் கவிந்து நதீஷான் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 7 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் கண்டி அணியின் கனவு கலைந்துபோனது.

துடுப்பாட்டத்தில் அவிஷ்க தரிந்து 64 ஓட்டங்களையும், தமிழ் பேசும் வீரரான அபிஷேக் ஆனந்தகுமார் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் திலும் சுதீர, அஷியான் டேனியல் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.