(எம்.எம்.சில்வெஸ்டர்)

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 2 தங்கம், ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை பெற்றுள்ளது.

வியட்நாம் பகிரங்க மெய்வல்லநர் போட்டி கடந்த 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற்றது. இலங்கை சார்பாக பங்கேற்ற ஹிமாஷ ஏஷான், சுமேதரணசிங்க ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், விதுஷா லக்சானி வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் இலங்கை சார்பாக இந்த மூவர் மாத்திரமே பங்கேற்றிருந்த நிலையில், இம்மூவரும் பதக்கங்களை வென்று சாதித்துள்ளமை விசேட அம்சமாகும்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ஹிமாஷ ஏஷான் போட்டித் தூரத்தை 10.54 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான சுமேத ரணசிங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 74.58 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேவேளை, பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்கேற்ற விதுஷா லக்சானி 13.3மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்துக்கு உரித்துடையவரானார்.