(எம்.எம்.சில்வெஸ்டர்)

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 : 4 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய சமீர ரத்நாயக்க தலைமையிலான இலங்கை அணி சம்பியனானது. 

 

இதன் மூலம் தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இலங்கை முதலிடம் பிடித்தது. 

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையுடன், ஆசிய பேஸ்போல் சம்மேளனம், இலங்கை பேஸ்போல் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த  ஆறு நாடுகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில், நடப்புச் சம்பியனான இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகியன குழு 'ஏ' யிலும், பாகிஸ்தான், ஈரான், பங்களாதேஷ் ஆகியன குழு 'பி' யிலும் அங்கம் வகித்தன. 

14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரானது, தியகமவிலுள்ள இலங்கை - ஜப்பான் நட்புறவு பேஸ்போல் விளையாட்டரங்கில் கடந்த 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

லீக் சுற்றில் குழு ஏ யில் முதலிடம் பெற்ற இலங்கை குழு பி யில் இரண்டாம் இடம் பிடித்த ஈரானுடனான போட்டியில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், குழு பி யில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான் அரை இறுதிப் போட்டியில் குழு ஏ யில் இரண்டாம் இடம் பிடித்த  இந்தியாவை வெற்றிகொண்ட பாகிஸ்தான் இறுதிக்குத் தகுதி பெற்றது.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆரம்பப் முதலே இலங்கை ஆதிக்கம் செலுத்தியிருந்தது. 5 ஆம் இன்னிங்ஸின் முடிவில் இலங்கை 3 : 0 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது. எனினும் பாகிஸ்தான் அணி இறுதி நான்கு இன்னிங்ஸ்களிலும் (6,7,8,9) ஓட்டங்களை பெற்றுக்கொள்வதில் கடுமையாகப் போராடியது. இதன் பயனாக 6 ஆவது இன்னிங்ஸில் ஒரு ஓட்டத்தையும், 8 ஆவது இன்னிங்ஸில் 2 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சுதாரித்துக்கொண்ட இலங்கை 8 ஆவது இன்னிங்ஸில் 2 ஓட்டங்களை ஈட்டிக்கொள்ள இலங்கை 5க்கு3 என்ற கணக்கில் 8 ஆவது இன்னிங்ஸ் நிறைவு பெற்றது.

9 ஆவதும் இறுதியுமான இன்னிங்ஸில் இலங்கை ஒரு ஓட்டத்தைக்கூட பெறாதானால் இலங்கை 5 ஓட்டங்களுடன் இலங்கையின் துடுப்பாட்டம் நிறைவு பெற்றது. இறுதி இன்னிங்ஸில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்த பாகிஸ்தான் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 5 : 4 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய இலங்கை சம்பியனானது. இப்போட்டித் தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக இலங்கையின் சஷிக துல்ஷான் தெரிவானார்.

இதன்மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற 13 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டியில்  முதற்தடவையாக சம்பியனான இலங்கை தற்போது முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் சம்பியனாகியது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஈரானை எதிர்கொண்ட இந்தியா 8 : 1 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.