பிரித்­தா­னிய கொடி பறக்­க­வி­டப்­பட்ட எண்ணெய் தாங்கிக் கப்­ப­லொன்று வளை­குடா பிராந்­தி­யத்தில்   ஈரானால் கைப்­பற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­ன­ருக்கும்   கப்­பல்­களில்  வந்த ஈரா­னிய ஆயுதப் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற  வானொலித்  தொடர்­பாடல் பதி­வுகள் வெளியா­கி­யுள்­ளன.

இந்த ஒலிப்­ப­திவில்  எச்.எம்.எஸ். மொன்ட்ரோஸ் கப்­ப­லி­லி­ருந்த  பிரித்­தா­னிய  கடற்­ப­டைக்கு அவர்­க­ளது எண்ணெய் தாங்கிக் கப்­பலை பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக  பரி­சோ­தனை செய்ய விரும்­பு­வ­தாக  ஈரா­னிய கப்­ப­லொன்­றி­லி­ருந்து  அனுப்­பப்­பட்­ட­தாக நம்­பப்­படும்  செய்தி  பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்த ஸ்ரெனா இம்­பெரோ எண்ணெய் தாங்கிக் கப்­பலில்  கடந்த  வெள்ளிக்­கி­ழமை ஈரா­னிய  அதி­கா­ரிகள் ஏறி­யி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து அந்த எண்ணெய் தாங்கிக் கப்­பலை உட­ன­டி­யாக விடு­விக்க  பிரித்­தா­னிய  வெளிநாட்டு செய­லாளர் ஜெரேமி ஹன்ட் ஈரா­னுக்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்­நி­லையில் பிரித்­தா­னிய கடல் பாது­காப்பு நிறு­வ­ன­மான றையட் குளோ­பலால் பெறப்­பட்­டுள்ள ஒலிப்­ப­திவில்  ஈரா­னிய கப்­பலி­லி­ருந்து  ஸ்ரெனா இம்­பெரோ எண்ணெய் தாங்கிக் கப்­ப­லுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக நம்­பப்­படும் செய்­தியில்  அந்தக் கப்­பலை பாதையை மாற்றிச் செல்ல  கோரப்­பட்­டி­ருந்­த­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

"நீங்கள் கீழ்ப்­ப­டிந்தால்  நீங்கள் பாது­காப்­பாக இருக்­கலாம்" என இதன்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

இந்­நி­லையில்  பிரித்­தா­னிய எச்.எம்.எஸ். மொன்ட் ரோஸ் கப்­பலால் ஸ்ரெனா இம்­பெரோ  கப்­ப­லுக்கு அனுப்­பப்­பட்ட செய்­தியில்,  "சர்­வ­தேச சட்­டத்­தின் பிர­காரம் நீங்கள்  சர்­வ­தேச ரீதியில்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட   நீரி­ணையில்  போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்­கையில்  உங்கள்  பாதையில் இடை­யூறு, தடை ஏற்­ப­டுத்­து­வது அன்றி உங்­களை தடுப்­பது கூடாது" என அறி­வு­றுத்­தப்­பட்­டது.

தொடர்ந்து பிரித்­தா­னிய கடற்­ப­டை­யினர்  ஈரா­னிய கப்­ப­லிடம் எண்ணெய் தாங்கிக் கப்­பலில் ஏறு­வ­தற்கு முயற்­சிப்­பதன் மூலம்  சர்­வ­தேச சட்டத்தை மீறு­வதை நோக்­காகக் கொண்­டி­ருக்­க­வில்லை என் ­பதை உறு­திப்­ப­டுத்த கேட்­டுக்­கொண்டுள்­ளனர்.

இந்­நி­லையில் ஈரான் அந்த ஸ்ரெனா இம்­பெரோ   எண் ணெய் தாங்கிக்  கப்பல் கைப்­பற்­றப்­ப­டு­வதை வெளிப்ப டுத்தும் காணொளிக் காட்­சி­யொன்றை நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  வெளியிட்­டுள்­ளது.

அந்த  எண்ணெய் தாங்கிக் கப்­பலை அதிவேக கப்­பல்கள் சுற்றிவளைத்­த­தை­ய­டுத்து அந்தக் கப்­பலில்  உலங்­கு­வா­னூர்­தி­யி­லி­ருந்து முக­மூ­டி­ய­ணிந்த ஈரா­னிய  படை­யினர் கயி­றுகள் மூலம் இறங்­கு­வதை அந்தக் காணொளிக் காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது.

எச்.எம்.எஸ். மொன்ரோஸ் கப்பல்  குறுக்­கீடு செய்து அந்த எண்ணெய் தாங்கிக் கப்­பலை மீட்க  விரைந்த போதும் அந்தக் கப்பல் ஏற்­க­னவே ஈரா­னிய  கடல் பரப்பில்  இருந்­ததால் அந்தக் கப்­பலால் அங்கு செல்ல முடி­யாது போன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்தக் கப்பல் கடந்த வெள்ளிக்­கி­ழமை வளை­கு­டா­வி­லுள்ள  முக்­கிய கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதையில் வைத்து ஈரா­னிய புரட்­சி­கர காவல் படை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது.

அந்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் சர்­வ­தேச கடல் போக்­கு­வ­ரத்து சட்­டங்­களை மீறி­யுள்­ள­தாக ஈரானால் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

மேற்­படி எண்ணெய் தாங்கிக் கப்பல்  மீன் பிடிப் பட­கொ­ன்­றுடன் மோதிய பின்னர்  நிற்­காது  அங்­கி­ருந்து விரைந்து செல்ல முயற்­சித்த­தை­ய­டுத்தே  அதனை ஈரா­னிய  புரட்­சி­கர காவல் படை­யினர்  கைப்­பற்­றி­ய­தாக   ஈரா­னிய அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் ஐ.ஆர்.என்.ஏ. ஊடகம் தெரி­விக்­கி­றது.

இந்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் பிரித்­தா­னிய வெளிநாட்டு செய­லாளர் ஹன்ட் தெரி­விக்­கையில், அந்த எண்ணெய்த் தாங்கிக்  கப்பல் ஓமானிய கடல் பரப்பில் பய­ணிக்­கையில் கைப்­பற்­றப்­பட்டு பின்னர் ஈரானை நோக்கிப் பய­ணிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தா­கவும் இது சர்­வ­தேச சட்­டங்கள் தொடர்­பான தெளிவான ஒரு மீறல் எனவும்  கூறினார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் விதிக்­கப்­பட்­டுள்ள  தடை­களை மீறி சிரி­யா­வுக்கு எண்­ணெயை  எடுத்துச்சென்ற  ஈரா­னிய எண்ணெய் தாங்கிக் கப்ப­லொன்றை   கிரால்டர் பிராந்­தி­யத்­துக்கு அப்பால் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யினர்  கைப்­பற்­றி­யி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் மேற்­படி எண்ணெய் தாங்கிக் கப்பல் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளமை குறித்து பிரித்­தா­னிய அமைச்­சர்கள் நேற்று முன்­தினம் சனிக்கிழமை அவ­சரக் கூட்­ட­மொன்றைக்கூட்டி கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இது தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுப்­பது என்­பது குறித்து பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  திங்­கட்­கி­ழமை (இன்று)  தீர்­மா­ன­மெ­டுக்­க­வுள்­ள­தாக ஹன்ட் கூறினார். நிலை­மையை தணி­விப்­ப­தற்­கான வழி­யொன்றைக் காண்­ப­தற்கு தாம் தொடர்ந்து முன்­னு­ரிமை கொடுக்­க­வுள்­ள­தாக  அவர் தெரி­வித்தார்.

பிரித்­தா­னிய  எண்ணெய் தாங்கிக் கப்­பலை ஈரான் கைப்­பற்­றி­யமை குறித்து  அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஜேர்­மனி உள்­ள­டங்­க­­லான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.