உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் 11 முறை சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாகவும் சம்பியனாகியுள்ளது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

இந் நிலையில் நேற்று நடைபெற்ற இத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்  மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சம்பியனானது.

இதேவேளை பிளே-ஆப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இங்கிலாந்து 58-42 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

சிங்கப்பூருக்கு எதிராக இன்று நடைபெற்ற 15ஆவது, 16 ஆவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் 78 க்கு 57 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை 15 ஆவது இடத்தைப் பெற்றது.

இத் தொடரில் இலங்கை அணியின் தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களை போட்டு அதிக கோல்களை போட்ட வீரராங்கனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நியூலாந்து கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த 7 நாட்களின் பின்னர் அந் நாட்டு வலைப்பந்தாட்ட அணி சம்பியனாகியுள்ளமை விசேட அம்சமாகும்.