தென்னாபிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற புகைப்படம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட கலைஞர் ஜெஸ்டின் சுல்லிவான் தன்னுடைய ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு படம் பிடித்துள்ளார்.

அப்போது யானை ஒன்று முகம் சிதைக்கப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாக வெட்டி வீசப்பட்ட நிலையில் இறந்துகிடந்த புகைப்படத்தை  ஜெஸ்டின் தன் கேமரா மூலம் பதிவு செய்தார். 

ஒரு நாளைக்கு குறைந்தது 100 யானைகளின் தந்தங்கள் இங்கு வெட்டப்படுவதாகவும், இந்த புகைப்படத்தில் இருக்கும் யானையின் தந்தம் சுமார் 20 நிமிடங்கள் அறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புகைப்படத்தை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஸ்கனக்ஷன் (Disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட அந்த யானையின்புகைப்படம் தற்போது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்படப் போட்டியில் போட்டியிடத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் அப்பகுதிவாசிகளை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களையும் கலங்கச்செய்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டுக்குள் உடல் பாகங்களுக்காக விலங்குகள் கொல்லப்படுவது  அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஆவணப்பட இயக்குனர் ஜெஸ்டின் சுல்லிவான் தெரிவிக்கையில்,

’’இந்தப்புகைப்படத்துக்கு டிஸ்கனக்ஷன் என பெயரிட்டுள்ளேன். தரையில் நின்று கொண்டு பார்த்தால் இதன் வீரியம் புரியாது.

மேலே இருந்து பார்த்தால் தான் புகைப்படத்தின் வலி புரியும். டிஸ்கனக்ஷன் என்பது யானைக்கும் துண்டித்து கிடக்கும் தும்பிக்கைக்கும் இடையேயானது மட்டும் அல்ல. விலங்குகள் கொலைக்கும் அதை கண்டுகொள்ளாத நமக்கும் இடையேயானது’’ என்று தெரிவித்துள்ளார்.

போட்ஸ்வானாவில் 5 வருடங்களாக அமுலில் இருந்த யானைகளை வேட்டையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த மாதம் திரும்ப பெறப்பட்டது.

இதனால் யானைகளை கொல்வது அங்கு குற்றமாகாது. ஆனாலும் விலங்குகளை வேட்டையாடுவது என்பது காலப்போக்கில் வனத்தையும் நாட்டையும் சீரழித்துவிடும் என விலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.