பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தனக்கு கொழும்பில் வீடு ஒன்று இல்லை­யென்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த ஆத­ரவு உறுப்­பி­ன­ரான வாசு­தேவ நாண­யக்­கார நேற்று பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தபோது ஆளும் கட்­சி­யினர் “ஊ” சத்தம் இட்­டனர்.

இதனால் வழமை போன்று வாசு­தேவ நாண­யக்­கார சபைக்குள் தகாத வார்த்தை ஒன்­றைக்­கூ­றவே சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது. வாசு­தேவ நாணக்­கார எம்.பி. தனி­யாக நின்று கூச்­ச­லிட மறு­பு­றத்தி ஆளும் கட்­சி­யினர் அதி­க­மாக சத்­த­மிட்­டனர். இதனால் சபை சிறிது நேரம் சர்ச்­சைக்­குள்­ளா­கி­யி­ருந்­ததைக் காண­மு­டிந்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது சிறப்­பு­ரிமைப் பிரச்­சினை ஒன்றை முன்­வைத்த வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. முன்­னைய அர­சாங்­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருந்த சிலர் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லங்­களை இது­வ­ரையில் ஒப்­ப­டைக்­க­வில்­லை­யென சிங்­களப் பத்­தி­ரிகை ஒன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அப்­பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்­தியில் எனது பெயரும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது.

நான் இப்­பா­ரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற உறுப்­பி­ன­ராக இருக்­கிறேன். எனினும் எனக்கு உரித்­துள்ள வீடு ஒன்றை அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. எனவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கு­ரிய உரிமை என்ற வகையில் எனக்கு வீடு ஒன்றை பெற்­றுத்­த­ரு­மாறு கோரு­கிறேன் என்றார்.

உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார இவ்­வாறு கோரிக்­கை­வி­டுத்த மறு­க­ணத்தில் ஆளும் தரப்பு பக்­க­மாக இருந்து “ஊ” சத்தம் எழுந்­தது.

வாசு

இத­னை­ய­டுத்து ஆளும் கட்சி எம்.பி.க்களைப் பார்த்த வாசு­தேவ நாண­யக்­கார “சும்மா இரு ஓய்” என்று கூறினார். அத்­துடன் நான் சிறப்­பு­ரிமைப் பிரச்­சினை ஒன்­றையே முன்­வைப்­ப­தா­கவும் கூறினார். எனினும் ஆளும் கட்­சியின் பக்­க­மா­க­வி­ருந்து பெரும் கூச்­சல்கள் எழுப்­பப்­பட்­ட­வாறு இருந்­தன.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த வாசு­தேவ எம்.பி. ஆளும் கட்­சி­யி­னரைப் பார்த்து மேலும் பல தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கித்தார்.

சபை முதல்வர்

இத­னை­ய­டுத்து ஒழுங்­குப்­பி­ரச்­சினை ஒன்றை எழுப்­பிய சபை முதல்வர் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல கூறு­கையில்; உறுப்­பினர் வாசு­தே­வ­வினால் முன்­வைக்­கப்­படும் பிரச்­சி­னை­யா­னது சிறப்­பு­ரிமைப் பிரச்­சி­னை­யாக ஏற்றுக் கொள்ள முடி­யாது. அது அவ­ரது வீட்­டுப்­பி­ரச்­சி­னை­யாகும். வீடு தொடர்­பான பிரச்­சினை ஒன்று அவ­ருக்கு இருக்­கு­மானால் அது தொடர்பில் அவர் கடிதம் மூலம் அறி­விக்கும் பட்­சத்தில் வீடு ஒன்றைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

சுஜீவ

இதன் போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய இரா­ஜாங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க கூறு­கையில்; வாசு­தேவ நாணக்­கார எம்.பி.யினால் வீடு தொடர்­பான பிரச்­சினை முன்­வைக்­கப்­பட்­டது. கொழும்பில் வீடு ஒன்று இல்­லாத உறுப்­பி­னர்­க­ளுக்கே மாதி­வெ­லியில் வீடு வழங்­கப்­ப­டு­கி­றது. நான் இரா­ஜாங்க அமைச்­ச­ராக இருந்தும் நான் அங்கு வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்­ள­வில்லை. நான் எனக்கு சொந்­த­மான வீட்­டி­லேயே இருக்­கிறேன் என்றார்.

நளின் பண்­டார

இதே­வேளை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஆளும் கட்சியின் நளின் பண்டார எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடுகள் அமைச்சராக இருந்தவர். எனினும் அவர் இப்பாராளுமன்றத்துக்கே பொறுத்தமற்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றார் எனவே அவற்றை அவர் வாபஸ் பெறவேண்டும் என்றார்.