(எம்.மனோசித்ரா)

எந்தவொரு கட்சியாலும் 160 இலட்சம் வாக்குகளில் 50 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க  தெரிவித்தார்.

காலியில் நேற்று இடம்பெற்ற ' தேசிய வழி " வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் அல்லது உயர்தரத்தில் கூட சித்தியடையாமல் வேட்பாளராக நியமிக்கப்படும் குடும்ப உறுப்பினர்களுக்கு யாரேனும் வாக்களிப்பார்களானால் அவர்கள் இந்த நாட்டை அவமானப்படுத்துபவர்களாகவே இருப்பார்கள். 

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வேலைத்திட்டமே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது. அத்தோடு கடன்சுமை அற்ற நாடாக இலங்கையை உருவாக்கக் கூடிய பொருளாதாரக் கொள்கையும் அவசியமாகும். 

இவற்றை திறம்படச் செய்வதற்கு கருத்து வேறுபாடுகளற்ற அரச மற்றும் தனியார் துறைகளோடு இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

எந்தவொரு கட்சிக்கும் தனித்து 50 இலட்சம் வாக்குகளைக் கூட பெற முடியாது. இலங்கையில் மொத்தம் 160 இலட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் 50 இலட்சம் வாக்காளர்கள் குறிப்பிட்ட எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிப்பவர்கள் அல்ல. அவர்கள் படித்த சமூகத்தினராவர் என்றும் அவர் தெரிவித்தார்.