சர்வதேச இராஜதந்திரிகளுடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (21.7) நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் எனும் கருத்தாய்வு நிகழ்வு மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஆட்சியில் இருக்க கூடிய இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான 14 பேரோடே இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த நாட்டில் அரசியல் குழப்பம் வரும்போது எமது அரசியல் தலைவர்களும் சட்டத்தரணிகளும் இரவு பகலாக நீதிமன்றத்திலே போராடி தற்போதுள்ள பிரதமரின் பதிவியை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். 

இந் நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது கொழும்பில் உள்ள அத்தனை இராஜதந்திரிகளையும் அழைத்து நான்கரை வருடங்களாக நாம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய போதிலும் இந்த அரசாங்கம் அரசியல் தீர்வில் இருந்து அத்தனை விடயங்களிலும் எம்மை ஏமாற்றியிருக்கின்றது. இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்குப்போக இருக்கின்றார்கள். இந் நிலையில் நாங்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியாது இருக்கிறது. எனவே ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் எமது மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்காது விட்டால் நாம் எமது ஆதரவை நீக்கிக்கொள்ளவுள்ளோம் என்கின்ற செய்தியை சொல்ல வேண்டும்.

இந் நிலையில் அவர்களுக்கும் அடுத்த ஜனாதிபதியாக யாரைக்கொண்டு வருவது என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது தற்போதைய ரணிலா அல்லது மகிந்த தரப்பில் உள்ள ஒருவரை கொண்டு வருவதா என்ற நிலை அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உள்ளது. 

ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கே தீர்மானிக்கும் சக்தி என்பதால் சர்வதேசமும் தமக்கு தேவையாக உள்ள தற்போதைய அரசை தக்க வைக்க வேண்டும் என்பதால் இந்த அரசாங்கத்தினை வைத்து தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்க்கும்.

இன்று தொல்லியல் திணைக்களம் வடக்கு கிழக்கில் எமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை இடங்களையும் சின்னங்களையும் வைத்துள்ளது. இந்த திணைக்களத்தின் அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசிற்கு கீழ்தான் உள்ளார். இவ்வாறு இருக்கையில் இற்றைவரை இந்த அமைச்சரை இவ்வாறான விடயங்களில் தலையிடுவதை நிறுத்த முடியாமல்தான் உள்ளது. 

ஆகவே தற்போதுள்ள ஒரு சந்தர்ப்பம் சர்வதேச இராஜதந்திரிகளை அழைத்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்யை வழங்கி செய்ய வைக்ககூடிய விடயங்களை செயற்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் யார் வர வேண்டும் என்று நினைக்கின்றனரோ நாமும் அவர்களை வர வைப்போம் என்பதனை நினைவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.