கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானால் கைப்பற்றப்ப்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை ஈரான் பிடித்துவைத்துள்ளது.

இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 

இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஈரான் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வருவதே எங்களின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று பிடிபட்ட ஸ்டெனா இம்பெரோ கப்பலில், 18 இந்தியர்கள் மற்றும் ரஷ்யா, லாட்வியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்த ஐந்து பேர் உள்ளனர் என்றும், கப்பலின் கேப்டன் இந்தியர் என்றும் ஹர்முக்சன் பிராந்தியத்தின் துறைமுகம் மற்றும் கடல் விவகாரங்கள் துறையின் இயக்குநர் கூறியுள்ளார்.