மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், அந்த தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று இருபதுக்கு 20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இந்த தொடருக்கான உத்தியோகபூர்வ  அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய கிரக்கெட் தேர்வு குழுவினர் கலந்து ஆலோசித்து அணியை தேர்வு செய்கிறார்கள்.

உலக கிண்ண தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்ததால் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான  தோனி இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெற வேண்டும் என்று ஷேவாக், கவுதம் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

இதனால் தோனி இத் தொடரில் இடம் பெறுவாரா? அல்லது இடம்பெற மாட்டார? என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில்  இத் தொடரிலிருந்து தானாக விலகுவதாக தோனி கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த 2 மாதங்கள் இராணுவத்தினருடன் இணைந்து தனது நேரத்தை செலவிட இருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பி உள்ளார். இராணுவத்தில் அதிக பற்று கொண்ட தோனி இந்திய இராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கேர்ணலாக இருப்பதும் நினைவு கூரத்தக்கது.

தோனிக்கு பதிலாக இளம் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பந்த்  இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்று விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா தேர்வு செய்யப்படலாம்.