முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர் குற்றவாளி என்று ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. அத்துடன் அமெரிக்க பிரஜாவுரிமையையும் சுயமாகவே நீக்கியுள்ளார். ஏனவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் எந்தத் தடைகளும் இல்லை என்று பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது தெரிவித்தார். 

அந்நேர்காணலின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- உங்களின் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் 11இல் உறுதியாக அறிவிக்கப்படுவாரா?

பதில்:- ஆம், பொதுஜன முன்னணியின் தேசிய மாநாடு அன்றையதினம் நடைபெறவுள்ளது. அதில் உத்தியோகபூர்வமாக தலைமைப்பொறுப்பினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயரையும் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார்.

கேள்வி:- அந்த வேட்பாளர் ராஜபக்ஷ குடும்பத்திலிருக்கும் ஒருவரா?

பதில்:- அதனை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார். மக்கள் மத்தியில் யாருக்கு ஆதரவு இருக்கின்றதோ, எவரால் வெற்றிபெறமுடியுமோ அவரே எமது வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வேட்பாளராக களமிறங்குவதற்கு அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தடைகளை ஏற்படுத்துமா?

பதில்:- வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டாலும் அவை நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் வரையில் குறித்த நபர் நிரபராதியே என்று உள்நாட்டுச் சட்டங்களில் மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆகவே அவற்றால் எத்தகைய பிரச்சினைகளும் ஏற்படாது.

கேள்வி:- ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் புதல்வி உட்பட புலம்பெயர்ந்தவர்கள் படுகொலை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வெளிநாடுகளில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்களே?

பதில்:- வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதும் எந்தவொரு நீதிமன்றத்திலும் அவர் குற்றவாளி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வெறுமனே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்மையானது அவருக்கு எவ்விதமான பாதிப்பினையும் ஏற்படுத்தாது.

கேள்வி:- கோத்தாபய அமெரிக்க குடியுரிமையிலிருந்து முழுமையாக நீங்கிவிட்டரா?

பதில்:- ஆம், அவர் சுதந்திரமாகவே குடியுரிமை நீக்கத்தினை செய்துள்ளார். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை பிரஜையாக நாட்டில் இருந்து பாரிய சேவை ஆற்றியருக்கின்றார் என்பதையும் மறந்து விடக்கூடாது.

கேள்வி:-கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குகின்றபோது சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- இதில் பிரச்சினைகள் இருப்பதாக நான் கருதவில்லை. காரணம், நாட்டில் எவ்வின மக்கள் கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இருக்க வேண்டும். உறுதியான ஆட்சியொன்று இருக்கின்றபோது தான் இந்த நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் பாதுகாப்பு உறுதியாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. நாட்டில் அரசாங்கமே நாட்டில் இல்லை. முன்கூட்டியே அறிந்திருந்தும் தாக்குதல்களை தடுத்திருக்கமுடியவில்லை. தற்போது ஒருதரப்பு பிறிதொரு தரப்பு மீது பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பலியான உயிர்களுக்கு பொறுப்புக்கூறுவது யார்? ஆகவே பிரஜைகளின் பாதுகாப்புக்காக பேதமின்றி குரல் எழுப்பும் தலைமைத்துவத்தையே பொதுமக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

கோத்தாபயவைப் பொறுத்தவரையில் அவருக்கு அத்தகைய குணாம்சங்கள் உள்ளன. கடந்த காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை ஏற்று முழுமையாக பூர்த்தி செய்துள்ளார். அதனையும் மக்கள் நன்கு அறிவார்கள். அத்தகையதொரு தலைமைத்துவமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

கேள்வி:- உங்களுடைய தரப்பில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடும்போக்கான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்ற நிலையில் பெரும்பான்மையின வாக்குகளை மட்டுமே மையப்படுத்தி செயற்படுகின்றீர்களா?

பதில்:- எந்தவொரு தேர்தலிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. எமது தரப்பில் பெரும்பான்மை வாக்குகளை மட்டுமே மையப்படுத்திச் செயற்பட்டால் போதும் என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் கருதியதும் கிடையாது. அவ்வாறு கருத்துக்களையும் முன்வைத்திருக்கவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சில தரப்புக்கள் எம்மைச் சுட்டிக்காட்டி பிரசாரங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

கேள்வி:- ஜனநாயகத்தின் பெயரால் ஐ.தே.முன்னணியுடன் முஸ்லிம்ரூபவ் தமிழ் அரசியல் தரப்புக்கள் இணைந்திருக்கையில், உங்களின் தரப்பிற்கு அத்தரப்புக்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் வாக்குகளை வழங்குவார்களா?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கூறுகின்றது. மாகாண சபைக்கு காணிரூபவ் பொலிஸ் அதிகாரங்களை கோருகின்றது. ஆனால்ரூபவ் மாகாண சபைகளுக்கு இருக்கும் 36அதிகாரங்களையும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதிருக்கின்றது.

மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநரின் நேரடி ஆட்சிக்குள் வடக்கு கிழக்கு தற்போது உள்ளது. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மையில்லாதபோது கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு உதவியளித்தது. அதிகார பகிர்வினைக் கோரும் கூட்டமைப்பே 13 ஆவது திருத்தச்சட்ட அதிகாரங்களை முடக்கியுள்ளது.

தற்போது அதிகாரப் பகிர்வு விடயத்தில் அதிகமாகவா அல்லது குறைவாகவா கிடைக்கும் என்று விவாதிக்க முடியாது. அதிகாரப்பகிர்வு என்பதே பூஜ்ஜியமாகி விட்டது. 1987ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைமையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை ஏற்படுவதற்கு காரணம் கூட்டமையாகும். இத்தகையதொரு நிலைமையை ஏற்படுத்துவோம் என்றா கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் முன்னிலையில் கூட்டமைப்பு செல்லும் போது இதுபோன்ற பல விடயங்களுக்கு மனச்சாட்சியுடன் பதிலளிக்க வேண்டியேற்படும்.

2015இற்கு பின்னரான காலத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமக்கு தேவையான சகலவற்றையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றார்களே தவிரவும் மக்களுக்கு இருந்த உரிமைகளையும் இல்லாதொழித்துவிட்டார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்ரூபவ் அரசாங்கத்தினை பாதுகாத்துள்ளார்கள். இதனால் தமக்கான தேவைகளை கோருவதற்கு முதலே அரசாங்கம் முன்வந்தும் வழங்கும் நிலையை உருவாக்கியிருக்கின்றார்கள்.

இதுபோன்று தான் முஸ்லிம்களும் நெருக்கடிகளை அனுபவிக்கின்றார்கள். ஆகவே தமிழ், முஸ்லிம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறத்தயாரில்லை. ஆகவே கடந்தகாலத்தைப்போன்று போலியான வாக்குறுதிகளை நம்பி தவறுகளைச் செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றோம்.

கேள்வி:-நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:-ஆம்

கேள்வி:- உங்களுடைய தரப்பு ஆட்சியில் அமர்ந்தால் அதனை எவ்வாறு கையாள திட்டமிட்டிருக்கின்றீர்கள்?

பதில்:- இனப்பிரச்சினைக்கு இன்னமும் இரண்டு வருடங்களில் தீர்வு என்று பிரதமர் ரணில் கூறுகின்றார். கடந்த நான்கரை வருடங்களில் தீர்வினை வழங்காதவர்கள் அடுத்த இரண்டு வருடங்களில் எவ்வாறு தீர்வினை வழங்குவார்கள்? அப்படியென்றால் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள்?

சரி, நாம் ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து எமது வேட்பாளர் வெற்றிபெற்றதும்பாராளுமன்ற ஆயுட்காலம் நிறைவடையும் வரையில் பொறுத்திருந்து காலத்தினை விரயம் செய்யப்போவதில்லை. உடனடியாக பாராளுமன்றத்தினைக் கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்வோம். அதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆசனங்களைக் பெற்று வலுவான அரசாங்கத்தினை அமைப்போம்.

இதன்மூலம் நாட்டில் ஸ்திரமான நிலைமைகளை ஏற்படுத்துவதோடு இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கான தீர்வினை அளிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆட்சியின் முதற்காலப்பகுதிக்குள்ளேயே நிறைவேற்றுவோம். அதில் காலம் தாழ்த்தப்போவதில்லை. தாமதங்கள் ஏற்படுகின்றபோது இத்தகைய தேசிய விடயங்களை நிறைவேற்ற முடியாத சூழலே ஏற்படும் ஆபத்துள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.

கேள்வி:- ஒஸ்லோ பேச்சுரூபவ் பிராந்தியங்களின் ஒன்றியம்ரூபவ் 13பிளஸ் உள்ளிட்டவற்றில் பங்கெடுத்தவர் என்ற அடிப்படையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அவைபோன்று கொள்கைரீதியான முன்மொழிவொன்றை பொதுஜன முன்னணி கொண்டிருக்கின்றதா?

பதில்:- விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக இலக்கை அடையலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தமையினால்தான் எமது தரப்பால் சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகளை அவர்கள் தட்டிக்கழித்தார்கள். இதனால் அந்த முயற்சிகள் தோல்விகளைக் கண்டிருந்தன. தற்போது யுத்தம் நிறைவுக்கு வந்து விட்டது. ஆகவே சமகாலச் சூழலுக்கு அமைவான விடயங்களை கருத்திற்கொண்டு நாம் முன்மொழிவொன்றைச் செய்வோம்.

தற்போதைய அரசாங்கம் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று முன்மொழிவைச் செய்திருந்தது. பிரதமர் கூட நிபுணர்குழுவின் முன்மொழிவுகள் என்று கூறினாரே தவிர அரசாங்கத்தின் முன்மொழிவு என்று கூறவில்லை. அந்தவகையில் அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவு தந்தையற்ற பிள்ளை போன்றது. இதுபோன்று நாம் செயற்பட மாட்டோம்.

கொல்வின் ஆர்.டி.சில்வா, அரசியலமைப்பினை வரையும்போது அடிப்படைக்கொள்கைகளுக்கு முக்கியத்துவமளித்து, மக்கள் மத்தியிலிருந்து கருத்துக்களைப் பெற்று ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை ஊடாக செயற்பாடுகளை முன்னெடுத்தாரோரூபவ் அதனையொத்ததாகவே நாம் செயற்படுவோம். அனைத்து மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுத்து, அவற்றை உள்ளீர்த்து அரசாங்கத்தின் சார்பாக பொறுப்புடன் அந்த முன்மொழிவு இடம்பெறும். ஆனால் அச்செயற்பாட்டிற்காக அரசாங்கம்போன்று நான்கு வருடங்கள் வரையில் காத்திருந்து தாமதிக்கப்போவதில்லை.

கேள்வி:- போரின் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருந்தபோதும் அதனை அரசாங்கத்தரப்பல்லவா தோல்வியுறச் செய்திருந்தது?

பதில்:- அவ்வாறில்லை. அரசாங்கம் என்றவகையில் நாம் யோசனைகளை முன்வைத்திருந்தோம். ஆனால், கூட்டமைப்பு ஆட்சியிலிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினை வீழ்த்தி ஐ.தே.க. தலைமையில் புதிய அரசாங்கத்தினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எடுத்துவிட்டார்கள். இதனால் நாம் முன்வைக்கும் எந்தவொரு விடயத்திலும் இணக்கப்பாட்டினை தெரிவிக்காது நிராகரித்தே வந்தனர். அதன்பின்னர் அவர்களின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகளாகிவிட்டனர்.

கேள்வி:- அப்படியென்றால் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவீர்களா? அவ்வாறு உருவாக்குவதானால் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள அரசியலமைப்பு முன்மொழிவுகளை சீர்தூக்கிப்பார்ப்பீர்களா?

பதில்:- தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்த எந்தவிடயத்தினையும் நாம் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. புதிய சிந்தனை, ஆரம்பம் என்பதற்காகவே எமக்கு மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். ஆகவே, புதிய செயற்பாடொன்றையே முன்னெடுப்போம். புதிய அரசியலமைப்பு அவசியமா இல்லை சீர்திருத்தங்களை மேற்கொள்வதா என்பது தொடர்பில் தனிநபராக என்னால் பதிலளிக்க முடியாது. மக்கள் அங்கீகாரத்தின் பின்னர், அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியே அதுபற்றி இறுதி தீர்மானம் எடுக்க முடியும். பரந்துபட்ட கலந்துரையாடல்கள் ஊடாகவே அந்த தீர்மானத்தினை எடுப்போம்.

கேள்வி:- ஆட்சிக்கு வந்தவுடன் 19ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்குவோமென நீங்கள் கூறியுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையையும் நீக்குவீர்களா?

பதில்:- 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் பாராளுமன்றுக்கு வந்தபோதே அச்சட்டமூலம் அமுலாகின்றபோது இரண்டு அதிகாரமையங்கள் நாட்டில் உருவாகும். இதனால் ஸ்திரமான தன்மை கேள்விக்குறியாகும். ஆகவேரூபவ் தேர்தல்முறைமையையும் உடனே மாற்றுங்கள் என்று சுட்டிக்காட்டினோம். எனினும் மைத்திரிபால சிறிசேன 19ஐ நிறைவேற்றி இருவாரங்களில் 20ஆவது திருத்தமாக தேர்தல் முறைமையை மாற்றும் சட்டமூலத்தினை கொண்டுவருவதாக கூறினார்.

ஆனால், அது நடைபெறவில்லை. அவர் வாக்குறுதியை நிறைவேற்றாமையே நாட்டில் இத்தகைய நிலைமை ஏற்பட காரணமாக இருக்கின்றது.

ஆகவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவதென்றால் அதனுடனேயே தேர்தல்முறைமையையும் மாற்ற வேண்டும். இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. எவ்வாறாயினும் மக்களின் தீர்மானத்திற்கு அமைவாகவே நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக ஒழிப்பதா இல்லை மறுசீரமைப்புக்களை செய்வதா என்பது பற்றி முடிவெடுப்போம்.

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றச்சாட்டுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டு ஜெனீவா தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ராஜபக்ஷ தரப்பினர் ஆட்சிப்பீடமேறினால் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படுமல்லவா?

பதில்:- இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் இதுவரையில் எவையும் நிரூயஅp;பிக்கப்படவில்லை. மனித உரிமைகளின் பெயரில் செயற்படும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைக்கின்றது. உதாரணமாக, யஸ்மின் சூக்கா முன்னெடுக்கும் செயற்றிட்டத்திற்கு பெரும் தொகை நிதி கிடைகின்றது. இதனால் அந்த செயற்றிட்டத்தினை உயிர்ப்புடன் வைத்து தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் பலவிடயங்களைச் செய்வார்கள்.

ஆனால் குற்றச்சாட்டுக்கள் எவையுமே நிரூயஅp;பிக்கப்பட்டதாக இல்லை. ஆகவே இதனை வடக்கு மக்கள் கவனமாக நோக்க வேண்டும். ராஜபக்ஷவின் யுகத்தில் தமக்கு கிடைத்தது என்ன? அண்மைய காலத்தில் கிடைத்தது என்ன என்பதை ஒப்பிட்டு பார்த்து தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி:- ராஜபக்ஷ தரப்பினரின் ஆட்சி மீண்டும் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளைவான் கடத்தல்கள் உள்ளிட்ட அச்சமான சூழல் மீண்டும் தோற்றம்பெற்றுவிடுமோ என்று தமிழர்களின் மனதில் இயல்பான அச்சம் உள்ளதே?

பதில்:- இவையெல்லாம் மக்களை கிலேசப்படுத்தி திசை திருப்புவதற்கான பிரசாரங்களாகும். மஹிந்த ராஜபக்ஷ போரின் பின்னர் வடக்கிற்கு அடிப்படைவசதிகள் உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்தார். வடக்கில் வாக்குகளே கிடைக்காதே இவ்வளவு நிதியை ஏன் அங்கு விரயமாக்குகின்றீர்கள் என்று ஒருசில அமைச்சர்கள் அமைச்சரவையில் பகிரங்கமாகவே விமர்சித்தபோது எமது எதிர்காலத்தினைரூபவ் வாக்குவங்கியை முன்னிலைப்படுத்தி செயற்படக்கூடாது என்று கூறினார்.

வடமாகாண சபைக்கான தேர்தலில் தோல்வியுறுவேன் என்று தெரிந்தும் வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக தேர்தலை நடத்தினார். இந்த விடயங்களை பற்றி யாரும்பேசுவதில்லை. சுயலாப அரசியலுக்காகவே அனைத்து குற்றங்களையும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் கணக்கில் வைப்பிலிட்டு அச்சமூட்டுகின்றார்கள். இந்த மாயைக்குள் தமிழ் மக்கள் இனியும் சிக்கியிருக்க மாட்டார்கள்.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரியும் பிரதமர் வேட்பாளராக மஹிந்தவும் களமிறங்க வேண்டும் என்று சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுபவர் வெற்றிபெறுபவராக இருக்க வேண்டும். ஜனாதிபதி யார், பிரதமர் யார் என்பது தொடர்பில் பங்கீடுகளைச் செய்வதற்காக நாம் பேச்சுவார்த்தை மேசையில் அமரவில்லை. நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச்செல்லும் ஐ.தே.கவிற்கு எதிரான பலமான அரசாங்கமொன்று அவசியம் என்பதே மக்களின் அபிலாஷையாக உள்ளது. அதற்கமைவாகவே ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கான முழுமையான அதிகாரத்தினையும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொதுஜன முன்னணி மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வழங்கியுள்ளார்கள். அதற்கமைவாகவே அவரின் அறிவிப்பு அமையும்.

கேள்வி:- கோத்தாபய வேட்பாளராகும்போது உங்கள் தரப்பில் உடைவுகள் ஏற்பட்டால் அவை தேர்தலில் பிரதிபலிக்குமல்லவா? 

பதில்:- ஜனநாயக தளத்தில் தமது அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும், தெரிவிப்பதற்கும் அனைவருக்கும் உரித்துள்ளதல்லவா. அவற்றை நாம் தடுக்க முடியாது.

நேர்காணல்:- ஆர்.ராம்