(நா.தனுஜா)

உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவாகும் இளைஞர், யுவதிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் யோசனையை நான் ஆதரிக்கிறேன் என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவாகும் இளைஞர், யுவதிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் யோசனையை நான் ஆதரிக்கிறேன். இராணுவப் பயிற்சி என்றவுடன் ஆயுதமேந்திப் போராடுவது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. ஆனால் ஒழுக்கத்தைப் போதிப்பதே அதன் அடிப்படையாகும். எனவே முறையான பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு, அதற்கமைவாக பயிற்சி வழங்கப்படுவது சிறப்பானதாகும்.

அனைவரிடத்திலும் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சியை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கடந்த வாரம் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அபிவிருத்தி அடைந்த அமெரிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால் 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு குறைந்தபட்சம் ஒருவருட காலமேனும் இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதனூடாக அவர்களுக்கு ஒழுக்கமே பிரதானமாகக் கற்பிக்கப்படுகின்றது.