2019 உலககிண்ணப்போட்டி முடிவடைந்த விதம் குறித்து தான் குழப்பத்தில் உள்ளதாக  உலக கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளிற்கு இடையில் வித்தியாசம் எதுவும் இல்லாத நிலையில்  இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக தீர்மானிப்பது நியாயமான விடயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப்போட்டியின் கடைசிபந்து வரை இரு அணிகளும் சமமான நிலையிலேயே இருந்தன  என தெரிவித்துள்ள அவர் நியுசிலாந்து அணிக்கு பாதகமான தருணம் என ஒரு தருணத்தை கூட குறிப்பிடமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி வென்ற தருணம் எது நியுசிலாந்து அணி தோற்ற தருணம் எதுவென என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டி முடிவடைந்த விதத்தினை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக நானும் கேன் வில்லியம்சனும் காணப்படுகின்றோம் என மோர்கன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நான் கேன்வில்லியம்சனுடன் பல தடவைகள் பேசினேன்,இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்த தருணம் எது என்பது குறித்தோ அல்லது நியுசிலாந்திற்கு பாதகமாக அமைந்த தருணம் எதுவென்பது குறித்தோ எங்களால் தீர்மானிக்கமுடியவில்லை எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2019 உலக கிண்ண இறுதிப்போட்டியே கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டி எனவும் மோர்கன் தெரிவித்துள்ளார்.