(எம்.மனோசித்ரா)

கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வியின் கீழ் உயர் தரத்தில் தொழிற்கல்வியை ஒரு பாடமாக தெரிவு செய்து  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தும் முகமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் 2017 ஆம் தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமாகும்.

எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற மனித வளத்தை பாடசாலையில் இருந்து உருவாக்கும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் பாடத்துறையின் கீழ் 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வியை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான  26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.