மதுபான கடைகளில் தரமான மது கிடைக்கச் செய்வேன்” என, தமிழகத்தின் வேலூர் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் வேலூர் லோக்சபா தொகுதிக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1ஆம் திகதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல்  அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று 18ஆம் திகதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மனுதாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், காலை 11 மணி முதல் 3 மணிவரை சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர். அப்போது, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன், கழுத்தில் கொய்யாப்பழம் மற்றும் மஞ்சள் கோர்த்த கயிறுகளை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். பொலிஸார் இதற்கு அனுமதி மறுக்கவே, அவைகளை கழற்றிவிட்டு ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்றார். 

பிறகு, மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த நிருபர்கள், “நீங்கள் வரும்போது கழுத்தில் கொய்யாப்பழ மாலை மற்றும் மஞ்சள் கயிறு அணிந்து வந்தது ஏன்..? ஜெயித்தால், தொகுதி மக்களுக்கு செய்யும் நன்மைகள் என்ன..?” என்று கேட்டனர்.

அதற்கு செல்லப்பாண்டியன், “மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிட்டால், அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது; அவர்களுடைய மனைவியின் தாலிக்கும் பாதிப்பு வராது என்பதை வலியுறுத்தவே அப்படி அணிந்து வந்தேன்.

 அடுத்ததாக, எல்லா டாஸ்மாக் மதுபான கடைகளிலும் தரமான சரக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று சகஜமாக தெரிவித்துவிட்டுப் போனார். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.