(ரொபட் அன்டனி)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு விசேட பிரதிநிதிகளும்   நாளை தனது விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பவுள்ளதுடன்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர்  தமது அறிக்கையை   மனித உரிமை ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளனர். 

சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவும், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸுமே இலங்கைக்கு இம் மாதம் 29 ஆம் திகதி வருகை தந்தனர். 

இவ்வாரம் முழுவதும்  இலங்கையில் தங்கியிருந்த  இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை  மேற்கொண்டனர்.  

குறிப்பாக சுயாதீன நீதித்துறை, நீதிதிதுறையின் தொழில்சார் தன்மை நாட்டின் சட்ட கட்டமைப்பு ஆகியவை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு அறிக்கையாளர்களும்  பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.  

அதுமட்டுமன்றி இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.