தனது மூன்று மகள்கள் உட்பட முழுக்குடும்பத்தையும் படுகொலை செய்த பேர்த்தை சேர்ந்த நபரிற்கு எந்த காரணத்தை கொண்டும் விடுதலை செய்ய முடியாது என்ற உத்தரவுடன் மேற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவை உலுக்கிய படுகொலைகளிற்கு தானே காரணம் என அன்டனி ரொபேர்ட் ஹார்வே ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே நீதிபதி இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

அன்டனி ரொபேர்ட் ஹார்வே தனதுமனைவி மனைவியின் தாயார் மற்றும் தனது மூன்று பிள்ளைகளை படுகொலை செய்திருந்தார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவர்கள் அனைவரும் அவர்களது வீட்டில் வைத்து கொல்லப்பட்டனர்.

அவர் பல நாட்களாக இந்த கொலைகளிற்காக திட்டமிட்டார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஒப்பிடக்கூடிய வேறு எந்த வழக்கும் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஹார்வே முதலில் இரவு வேலையிலிருந்து வீடு திரும்பிய தனது மனைவியை கொலை செய்த பின்னர் தனது குழந்தைகள் மூவரையும் கத்தியால் குத்தி படுகொலைசெய்திருந்தார்.அதில் ஒரு குழந்தைக்கு 38 காயங்கள் ஏற்பட்டிருந்தது.அவர்கள் உறக்கத்திலிருந்தவேளையே அவர்களை கொலை செய்திருந்தார்.

மறுநாள் காலை தனது மனைவியின் தாயார் வீட்டிற்கு வந்தவேளை அவரையும் ஹார்வே கொலை செய்திருந்தார்.

ஐந்து நாட்கள் அந்த உடல்களுடன் வீட்டில் தங்கியிருந்தஹார்வே அந்த உடல்களிற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் புகைப்படங்களையும் எடுத்திருந்தார்.

தான் கொலை செய்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர் கடிதங்களையும் எழுதியிருந்தார்.

எந்த காரணத்திற்காகவும் விடுதலை செய்யக்கூடாது என்ற உத்தரவு மிக மோசமான குற்றங்களிற்கு மாத்திரம் வழங்கப்படுகின்றது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீங்கள் செய்த குற்றங்களின் அளவை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.