ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையை பெரிதுபடுத்த வேண்டாம் எனத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், இது தொடர்பில் எனக்கு எவர் மீதும் கோபம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உண்மையில் நேற்று முற்பகல் 11.30 க்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டத்தை, அரை மணித்தியாலம் தாமதித்து 12 மணிக்கே ஆரம்பித்தோம். எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி தமது அறையில் காத்திருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் எம்.பி.க்கள் வருவார்கள் என நாம் காத்திருந்தோம்.

என்னுடன், அமைச்சர் பழனி திகாம்பரம், எம்.பி.க்களான திலகராஜ், வேலுகுமார், வியாலேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

குறைந்தபட்சமாக இன்னொரு சகோதர சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களின் பொது பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பி. க்கள் ஒன்று கூடுவதை நினைத்து நாம் மகிழ்வோம்.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டம், அவசர பிரச்சினை தொடர்பில் நடைபெற்ற அவசர கூட்டம். அனைவருக்கும் ஏதோ ஒரு முறையில் அவசர அழைப்பு தகவல் அனுப்பப்பட்டது, பரிமாறப்பட்டது, ஊடகங்களிலும் கூறப்பட்டது.

ஸ்ரீதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள இயலாமை தொடர்பில் தகவல் தெரிவித்திருந்தார்கள்.

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி.க்களான அரவிந்த குமார், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நாட்டில் இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் முத்து சிவலிங்கம் சுகவீனம் என கூறப்பட்டது. சுவாமிநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏனையோர் பணி காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.

எது எப்படி இருந்தாலும், எனது அமைச்சின், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வடகிழக்கில் தொடரும். இவை பற்றி நானே முடிவு செய்வேன்.

இவை தவிர்ந்த வடகிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், நான் இனி தலையிடேன். இவை தொடர்பில் வடகிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை என்னிடம் முன் வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன்.

மூன்று வருடங்களுக்கு முன்னேரே, முதற்கட்டமாக, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தமிழ் பாராளுமன்ற ஒன்றியம் ஒன்றை அமைக்க வேண்டும், பின் அது தமிழ் பேசும் பாராளுமன்ற ஒன்றியமாக விரிவு படுத்தப்பட்ட வேண்டும் என நான் பகிரங்கமாக யோசனை கூறி இருந்தேன்.

இந்த ஒன்றியம் கட்சி, தேர்தல், பிரதேச பேதங்களுக்கு அப்பால் எமது பொதுவான பிரச்சினைகளை அரசாங்கம், சிங்கள கட்சிகள், பெளத்த தலைமைகள், சர்வதேச சமூகம் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறியிருந்தேன்.

புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறையில் வராது. அதற்கான அரசியல் திடம் இங்கே இல்லை என இந்த அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே கூறியிருந்தேன்.

இவை இன்று உண்மைகளாகி விட்டன. எனினும் இவற்றுக்கு இன்று காலம் கடந்து விட்டது. விரைவில், ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போன்று கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புகிறேன் என்றார்.